court

img

இந்தியர்களுக்கு இன்னும் செலுத்தி முடிக்கவில்லை....... தடுப்பூசி ஏற்றுமதிக்கு அவசரம் காட்டியது ஏன்? தில்லி உயர்நீதிமன்றம் கேள்வி....

புதுதில்லி:
கொரோனா தடுப்பூசியை, இந்தியர்களுக்கே முழுமையாக செலுத்திமுடிக்காத நிலையில், அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தது ஏன்? என்றுமத்திய அரசுக்கு தில்லி உயர்நீதிமன்றம் கேள்விஎழுப்பியுள்ளது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டத்தில் சுகாதார ஊழியர்கள் உட்பட மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் 1 அன்று இரண்டாம் கட்டப் பணிகள் துவங்கி, தற்போது 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட நீதிமன்றத்தில் பணிபுரிவோரையும் முன்களப் பணியாளர்களாகக் கருதி, அவர்களுக்கும் உடனடியாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தில்லி உயர் நீதிமன்றத்தில் அண்மையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு, வியாழனன்று நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ரேகா பல்லி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டமிடல் குறித்து, பல்வேறு கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியுள்ளது.“கொரோனா தடுப்பூசியைக் குறிப்பிட்ட நபர்கள் மட்டுமே தற்போது போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு ஏன் இவ்வளவு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது? நம் நாட்டிலேயே இன்னும் பல கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்படவில்லை. இந்தச் சூழ்நிலையில், வெளிநாடுகளுக்கு அன்பளிப்பாகவும் வணிக ரீதியிலும் கொரோனா தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்தது ஏன்?” என்று கேட்டுள்ள நீதிமன்றம்,“நாட்டில் உள்ள  மருந்து நிறுவனங்களின் திறனை முழுமையாகப் பயன்படுத்தவில்லை” என்றும் குற்றம் சாட்டியுள்ளது.மேலும், தற்போதுள்ள அவசரநிலையை உணர்ந்து இந்தியர் களுக்கு விரைவில் தடுப்பூசிகளைச் செலுத்த நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்றும் உத்தர விட்டுள்ளது.

;